பானிபூரி சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்: நடந்தது என்ன?
ஈரோட்டில், சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் ரோகிணி தேவி(34). பட்டதாரி பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது சகோதரர் பானிபூரி வாங்கி கொடுத்துள்ளனர்.
இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்துள்ள நிலையில், வீட்டில் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை வழக்கம் போல் எழுந்து, குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த ரோகிணி சோர்வாக காணப்பட்டதோடு, திடீரென மயங்கிவிழுந்துள்ளார். உடனே உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை தரப்பில் கூறுகையில், பெண்ணின் உறவினர்கள் பானிபூரி சாப்பிட்டதால் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும். மேலும் பானிபூரி எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.