கைக்குழந்தையுடன் கைவிட்ட கணவர்... ஐஸ்கிரீம் விற்ற ஊரிலேயே பொலிசாக வந்த இளம்பெண்
காதல் திருமணம் செய்து 19 வயதில் கைக்குழந்தையுடன் கணவரால் கைவிடப்பட்ட பெண் தற்போது பொலிஸ் அதிகாரியாக சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.ஆனி சிவா(31). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 மாதக் கைக்குழந்தையுடன் 19 வயதில் கணவரால் தனித்து விடப்பட்டார்.
பின்பு ஆனியை அவரது பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளாமல் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
இறுதியாக தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த ஆனி, திருவிழாக்களின் போது ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்து கொண்டும், கிடைத்த வேலையினை செய்து கொண்டும் படிப்பினை தொடர்ந்துள்ளார்.
தற்போது பொலிஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்த ஊரிலே சப் இன்ஸ்பெக்டராக ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார்.
தன்னை தூக்கியெறிந்த கணவரின் குடும்பத்தாருக்கும், தனது குடும்பத்திற்கும் உலகமே போற்றும் பெண்ணாக வலம்வருகின்றார்.
