திருமணமான மூன்று மாதத்தில் நடந்த துயரம்: பரிதாபமாக உயிரிழந்த புதுப்பெண்
திருமணமாகி வெறும் 3 மாதத்தில் இளம்பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த ராச்சமங்கலம் காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (21). பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கும், பக்கத்து பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அப்பெண், நேற்று தனது பெற்றோரை அலைபேசியில் அழைத்து, ”நாளை நீங்கள் என்னைக் காண வருவீர்கள்” என சந்தேகப்படும்படி கூறியிருந்ததோடு, ”எனக்கு மரணம் காத்திருக்கிறது” எனவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதனால் பதறிப்போன பெண்ணின் பெற்றோர், சீனிவாசனைத் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய போது எந்த பிரச்சினையும் இல்லை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் குடும்பப் பிரச்னையின் காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் தனது பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.
அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தியது சீனிவாசன் வீட்டாருக்குத் தெரியாது எனக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தும்படியாக உள்ளது.
எங்கள் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுவந்து பரிசோதித்த பின்னரே, அவர் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தியது அக்குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது” என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.