இந்தியாவை விட்டு வாட்ஸ்அப் வெளியேறுகிறதா? உண்மை நிலவரம் என்ன?
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுவதாக வெளியான தகவலுக்கு, தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இல்லை என்று உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுத்தமா?
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69A இன் கீழ் பயனர் விவரங்களை மத்திய அரசுடன் பகிர வேண்டும் என்ற உத்தரவுகளின் காரணமாக வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்த பரிசீலிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஷ்வினி பதில் அளித்துள்ளார். சமூக ஊடக தளங்கள் தொடர்பான மத்திய அரசின் உத்தரவுகள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழிகாட்டுதல்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் காப்பதற்கும் மற்ற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கும் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப் தனது என்கிரிப்ஷன் அம்சத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் சேவையை நிறுத்திக்கொள்வோம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
வாட்ஸ்அப்பின் என்கிரிப்ஷன் தொழில்நுட்பம், மெசேஜ் அனுப்பும் பயனும் பெறும் பயனரும் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனரின் தனியுரிமைக்கு முக்கியமானது என்று வாட்ஸ்அப் நிறுவனம் வாதிடுகிறது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமாக உள்ளதாகவும் வாட்ஸ்அப் கூறியது.
முன்னதாக, மெட்டா குழுமத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், மெசேஜிங் தொழில்நுட்பங்களை இந்தியா விரைவாக ஏற்றுக்கொண்டிருக்கிறது எனப் பாராட்டினார்.
இந்தியா தொழில்நுட்ப புதுவரவுகளை கிரகித்துக்கொள்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகிலேயே மிக அதிக பயனர்களைக் கொண்ட நாடும் இந்தியா தான்.
இதனால் இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு மெட்டா நிறுவனம் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து வருகிறது.
இதற்காக சட்டப் போராட்டங்கள் இருந்தாலும் வாட்ஸ்அப் இந்திய சந்தையில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக எந்த அறிகுறியும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |