எம்ஜிஆர்., முதல் விஜய் வரை... கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வாள் காணிக்கை மரபின் பின்னணி என்ன?
தென் தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் ஒன்று கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில்.
இங்கு அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாளை காணிக்கையாக வழங்குவது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு முக்கிய வழிபாட்டு மரபாக உள்ளது. இதன் பின்னணி காரணம் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாள் காணிக்கையில் பின்னணி
வாள் என்பது பாரம்பரியமாக வீரம், சக்தி, வெற்றி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பும், வெற்றி பெற்ற பின்னரும் தங்களின் வாளை இறைவனிடம் சமர்ப்பித்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மரபே காலப்போக்கில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் வெற்றி மற்றும் பலத்திற்காக வாள் காணிக்கை செலுத்தும் வழக்கமாகத் தொடர்ந்ததாக நம்பப்படுகிறது.

இந்த வழக்கம் இன்றைய அரசியல்வாதிகளால் உருவானது அல்ல. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் மூகாம்பிகை அம்மனுக்கு வாள் காணிக்கை செலுத்தியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மூகாம்பிகை அம்மன் மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாகப் போற்றப்படுகிறார். குறிப்பாக காளி, துர்கா அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதால், ஆயுத வழிபாடும் வாள் காணிக்கையும் இத்தலத்தில் தனிச்சிறப்பு பெற்றதாக நம்பப்படுகிறது.
கருவறையில் உள்ள ஜோதிர்லிங்கத்தில் காணப்படும் ஸ்வர்ணரேகை, சிவனும் சக்தியும் ஒன்றே என்பதைக் குறிக்கும் என கோவில் மரபு கூறுகிறது. இதனால் மூகாம்பிகையை வழிபட்டால் வெற்றி, வீரியம், பதவி நிலைத்தன்மை உள்ளிட்ட அருள்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1977-ல் தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த வாள் முக்கிய விழாக்களில் அம்மனுக்கு சாத்தப்படும் வழக்கமும் இங்கு நடைமுறையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாள் காணிக்கை செலுத்தும் மரபைத் தொடர்ந்து வருகின்றனர்.
அதனால், கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை என்பது வெறும் காணிக்கை அல்ல; வெற்றி, வீரியம், சக்தி ஆகியவற்றை இறைவனிடம் சமர்ப்பிக்கும் ஒரு பழமையான மரபின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.