மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல்
பொதுவாகவே நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்யும் போது மண்ணில் இருந்து வரும் வாசனை அனைவுக்குமே பிடிக்கும். அது ஏன் மனதுக்கு ஒரு விதமான அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
உண்மையில் மழைவாசத்துக்கு பின்னணியில் கடந்த கால நியாபகங்கள் மட்டுமன்றி இது அனைவருக்கும் பிடிப்பதற்கு பின்னால் அறிவியலும் இருக்கிறது என்பதே உண்மை. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாசனைக்கு என்ன காரணம்?
வெறும் மண்ணும் தண்ணீரும் கலப்பதன் விளைவாக மாத்திரம் இந்த இந்த வாசனை உருவாவது கிடையாது.
இடியுடன் கூடிய மழை பெய்தபிறகு சுத்தமான காற்றும் ஈரமான நிலத்திலிருந்து ஒரு நல்ல வாசம் வருவதற்கு காரணமாக பாக்டீரியா, செடிகள் மற்றும் மின்னல் ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் , பொதுவாக மழை பெய்யும்போது வரும் இந்த மண் வாசனைக்கு அறிவியலில் 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர் கொடுக்கப்படுட்டுள்ளது. பெட்ரிகோர் என அறியப்படும் அந்த வாசனை குறித்து அறிவியல் அறிஞர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்துவருகிறார்கள்.
அந்தவகையில், இந்த மண் வாசனைக்கு 'ஜியோஸ்மின்' மற்றும் '2-MIB' எனப்படும் வேதிப்பொருட்கள் முக்கியக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

அதாவது மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாக்களே (Streptomyces) இந்த வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.
கோடையில் மண் காய்ந்து போகும்போது, இந்த பாக்டீரியாக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை உருவாக்குகின்றன.
அவை மழைத்துளிகள் மண்ணில் வேகமாக தொடும்போது, இந்த வேதிப்பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வாசம் காற்றுடன் கலந்து மேலே எழும்புகிறது. இந்த வாசனை மனிதர்களுக்கு அலாதி இன்பத்தை கொடுப்பதற்கு பின்னாலும் அறிவியல் காரணங்கள் காணப்படுகின்றது.

ஏன் நமக்கு பிடிக்கிறது?
மனிதர்களின் மூக்கால் இந்த 'ஜியோஸ்மின்' வாசனையை மிகத் துல்லியமாக கண்டறிய முடியும்.காரணம் நம் முன்னோர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த வாசனையை ஒரு அறிகுறியாக கருதினார்கள் என ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதர்கள் மட்டுமன்றி ஒட்டகங்களும் பாலைவனத்தில் நீர்நிலைகளைக் கண்டறியவும், சில பூச்சிகள் முட்டையிடத் தகுந்த இடத்தைத் கண்டுப்பிடிக்கவும், இந்த வாசனையைப் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. மேலும் இந்த வாசனைக்கு மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் இயல்பாகவே காணப்படுகின்றது.
அது தான் நாம் இந்த வாசனையை நுகரும் போது அமைதியாக உணர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதன் காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு மண்வாசனை ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |