விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய Pilot இன் சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும் வினோத சடங்கு!
விமானத்தை முதல் முறையாக வெற்றிகரமாக இயக்கிய பின் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும் வினோத பாரம்பரியம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
பைலட்களுடைய சட்டையின் பின் பகுதியை கிழித்து தொங்க விடுவது என்பது நகைச்சுவைக்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ செய்யப்படும் விஷயம் கிடையாது.
மாறாக மாணவர்களாக இருந்து பைலட்களாக உருவெடுப்பவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான நடவடிக்கைதான் இது.
அதாவது பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்னர், அவர்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும்.
முதல் முறையாக விமானத்தை தனியாக வெற்றிகரமாக இயக்கி விட்டு வந்த பின்னர், புதிய பைலட்டுடைய சட்டையின் பின் பகுதியை அவரது வழிகாட்டி கத்தரிக்கோலால் கிழிப்பார்.
அதன் பின்னர் கிழிக்கப்பட்ட சட்டையில், புதிய பைலட்டின் பெயர் மற்றும் அவர் முதல் முறையாக தனியாக இயக்கிய விமானத்தின் விபரங்கள் எழுதப்படும். அத்துடன் ரன்வே மற்றும் ஏர்போர்ட் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்படும்.
இதனைதான் பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்க விடுகின்றன.
சட்டையின் பின் பகுதியை கிழிக்கும் இந்த நிகழ்வு, வழிகாட்டிகள் தங்கள் மாணவர்கள் மீது, அதாவது புதிய பைலட்களின் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
ஹெட்செட்கள் மற்றும் ரேடியோ கம்யூனிகேஷன் ஆகியவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, அதாவது மனிதர்கள் பறக்க தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய திறந்தநிலை காக்பிட் கொண்ட விமானங்களில்தான் மாணவ பைலட்களுக்கு, வழிகாட்டிகள் பயிற்சி வழங்குவார்கள்.
இந்த விமானங்களில் மாணவர்கள் முன்னே அமர்ந்திருக்க, வழிகாட்டிகள் பின்னால் அமர்ந்திருப்பார்கள்.
தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது.
எனவே மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுக்க வேண்டும்.
இதன் பின்னர் மாணவ பைலட்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பியதும், தேவையான ஆலோசனைகளை வழிகாட்டிகள் அவர்களுக்கு வழங்குவார்கள்.
ஆனால் மாணவ பைலட்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின், இப்படியான ஒரு தகவல் தொடர்பு இனி தேவையில்லை என்பதை குறிக்கும் விதமாகதான், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் கத்தரிக்கிறார்கள்.