வீட்டில் காய்கறியே இல்லையா? மீல் மேக்கரை வைத்து வெள்ளை சால்னா வைக்கலாம்
சப்பாத்தி, பூரி இவற்றுடன் சாப்பிடுவதற்கு மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை அல்லது மாலை நேர உணவிற்கு சப்பாத்தி செய்வது சில வீடுகளில் வழக்கமாக இருக்கின்றது. ஆனால் அதற்கு குருமா வைப்பதற்கு வீட்டில் காய்கறி வேண்டும் என்று நினைப்பதுண்டு.
தற்போது காய்கறி இல்லாத தருணத்தில் சப்பாத்தி, பூரி, புரோட்டா என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு
மீல் மேக்கர் - 1 கப்
சுடுநீர் - தேவையான அளவு
புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/2 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - சிறிது
வதக்கி அரைப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
முந்திரி - 10

தாளிப்பதற்கு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
அரைத்த மசாலா
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 கப்
ஊற வைத்த மீல் மேக்கர்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கசூரி மெத்தி - சிறிது
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்துக்கொண்டு, அதில் சுடுதண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை பிளிந்து தனியாக எடுத்து, அதனை சாதாரண தண்ணீரில் இரண்டு முறை கழுவி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் முந்திரியை சேர்த்து வதக்கி, ஆற வைத்த பின்பு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இத்துடடன் அரைத்த மசாலா விழுது, மிளகு தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வதக்க கொதிக்க வைக்கவும்.
இதில் ஊற வைத்த மீல் மேக்கரை சேர்த்து கொதிக்க விட்ட பின்பு மிளகுதூள், கஸ்தூரி மெத்தி, சர்க்கரை மற்றும் கொத்தமல்லி இவற்றினை சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளை மீல் மேக்கர் சால்னா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |