உங்க வீட்டில் எலி இருக்கா? அப்போ இந்த உயிர்கொல்லி நோய்கள் தாக்கலாம் ஜாக்கிரதை..!
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இயற்கைக்கு நன்மை செய்பவைதாம். மரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் பரவுவதற்கு எலிகளின் பங்கு மிகவும் அவசியம்.
உலகின் உணவுச்சங்கிலி நிச்சயம் எலிகளின்றி முழுமை பெறாது. ஆனால், சமீபகாலங்களாக எலிகள் மனித குலத்துக்கு எதிரியாக மாறிக்கொண்டிருக்கின்றன.
நெல் மூட்டைகள் மற்றும் இதர தானியங்கள் இருக்கின்ற விவசாயிகளின் வீட்டில் எலிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் எலிகள் எப்படியாவது ஊடுருவி விடுகின்றன.
வீட்டில் உள்ள உணவுப்பொருட்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்லாமல் கார், பைக் என்று சகலத்திலும் புகுந்து எலிகள் நாசம் செய்வதால் அது நமக்கு பெரும் எதிரியாகவே இருக்கின்றது. எலிகலால் பரவக்கூடிய உயிர்கொல்லி நோய்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
எலிக்காய்ச்சல்
எலிக்காய்ச்சல் ( Leptospirosis) என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் நோய். ஒருவகை பாக்டீரியாவின் மூலம்தான் இது பரவுகிறது. எலிக்காய்ச்சலைப் பரப்பும் பாக்டீரியாவானது, பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
எலியின் சிறுநீர், மலத்தில் இந்த பாக்டீரியா வெளியேறும். தரையில், தண்ணீரில் ஏன் உங்கள் வீட்டுக் குடத்தில் என எந்த இடத்தில் எலி சிறுநீரைக் கழித்தாலும் அந்த இடத்தில் பாக்டீரியா பரவும். எலியின் கழிவுகள் கலந்த தண்ணீர் அல்லது உணவை நாம் உட்கொள்ளும்போது எலிக்காய்ச்சல் ஏற்படும்.
எலியின் கழிவுகளை நாம் மிதித்துவிட்டால், நம் உடலில் உள்ள காயங்கள், சிராய்ப்புகள், உலர்ந்த பகுதிகள், வாய், மூக்கு, அந்தரங்கப் பகுதிகள் வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடும்.
ஹண்டா வைரஸ்
மிக மோசமான ஹண்டா வைரஸ்களை சுமந்து வரக்கூடியதாக எலிகள் இருக்கின்றன. எலிகளின் சிறுநீர், எச்சம் அல்லது எச்சில் போன்றவற்றின் மீது நம்முடைய கை அல்லது உடலின் இதர பாகங்கள் படும் போது அந்த வைரஸ் நமக்கு பரவுகின்றன.
மிகக் கடுமையான சுவாச பிரச்சனையை இது உண்டாக்க கூடும் மற்றும் தீவிர விளைவாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
சாலமோனெல்லாசிஸ்
எலிகளால் ஏற்படக்கூடிய பாக்டீரியா தொற்றுகளில் இதுவும் ஒன்று. இதை காய்ச்சலை ஏற்படுத்தும் மற்றும் வயிற்றுப் பிடிப்பை உண்டாக்கும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் உண்டாகலாம்.
நமக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கின்ற எலிகள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |