ஆடி வெள்ளிக்கிழமைகள்.., எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனை வழிபட வேண்டும்?
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மன் வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
ஆடி முதல் வெள்ளி- சொர்ணாம்பிகை
முதல் ஆடி வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகை அம்மனுக்கு உகந்த நாள். இந்த நாளில் அம்மனை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும். கடன் பிரச்சனைகள் குறையும். தங்கம் சேர வேண்டும், அடமானத்தில் உள்ள நகைகளை மீட்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த அம்மனை வழிபடலாம்.
ஆடி இரண்டாம் வெள்ளி- அங்காளம்மன்
இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு உகந்தது. இந்த நாளில் வழிபட்டால் புத்திக்கூர்மை, தைரியம் மற்றும் மனவலிமை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் கிடைக்கும்.

ஆடி மூன்றாம் வெள்ளி- காளிகாம்பாள்
மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காளிகாம்பாளை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. இந்த வழிபாடு ஆரோக்கியம், தைரியம் மற்றும் வெற்றியை வழங்கும் என்று கூறப்படுகிறது. செல்வ வளமும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆடி நான்காம் வெள்ளி- காமாட்சி அம்மன்
நான்காம் ஆடி வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மனை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் வழிபட்டால் தீய சக்திகள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி ஐந்தாம் வெள்ளி- மகாலட்சுமி, பராசக்தி
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி, பராசக்தி மற்றும் குலதெய்வத்துடன் தொடர்புடைய பெண் தெய்வங்களை வழிபட ஏற்ற நாளாகும். மாலையில் ஐந்து முக விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம், ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்பப்படுகிறது. பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.