whatsapp இல் அதிரடி மாற்றம்... இனி இப்படி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதாம்!
வாட்ஸ்அப்பில் ஒருமுறை பார்க்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயலும்போது ஸ்கிரீன்ஷாட் தானாகவே தடுக்கப்படும் அளவு புதிய அப்டேட் வந்துள்ளதாம்.
iOS பீட்டா சோதனைக்குப் பிறகு, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் ஸ்கிரீன் ஷாட் தடுப்பை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம் பயனர்கள் அனுப்பும் ஒருமுறை பார்க்கக் கூடிய படங்களையும் வீடியோக்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதைத் தடுக்கும்.
மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது பயனர்களுக்கு அவர்களின் உரையாடல்களின் மீது அதிக கட்டுப்பாட்டை அளித்து செய்தியின் பாதுகாப்பு அடுக்குகளை அதிகரிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
ஸ்கிரீன்ஷாட் தடுப்பு
ஸ்கிரீன்ஷாட் தடுப்பது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 3 அம்சங்களில் ஒன்றாகும்.
இது ஆண்ட்ராய்டு மட்டுமின்றி iOS க்கான வாட்சப் பீட்டாவிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த அம்சத்தில் பெறுநர் ஒருமுறை பார்க்கும் படங்களையும் வீடியோக்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயலும்போது, ஸ்கிரீன்ஷாட் தானாகவே தடுக்கப்படும். ஆனால் அனுப்புநர் எந்த அறிவிப்பையும் பெறமாட்டார். இருப்பினும், ஒரு பயனர் இரண்டாம் நிலை தொலைபேசி அல்லது கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முடியும்.
குரூப் சாட்டில் இருந்து சத்தமின்றி வெளியேறல்
மற்றொரு புதிய அம்சம் மூலம் பயனர்கள் குரூப் சாட்டில் இருந்து அனைவருக்கும் தெரிவிக்காமல் வெளியேற முடியும்.
இதற்கு முன்னாள் குழுவை விட்டு உறுப்பினர் ஒருவர் வெளியேறினால் குழுவில் உள்ள அனைவருக்கும் உறுப்பினர் விலகிய செய்தி தெரியும். அது தற்போது தடுக்கப்படுகிறது.
ஆன்லைன் ஸ்டேட்டஸ்
நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது உங்கள் ஆன்லைன் நிலையை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை இனி நீங்களே கட்டுப்படுத்த முடியும்.
அதோடு மெட்டா நிறுவனத்தின், முகநூல், இன்ஸ்டாகிராம் போலவே வாட்சப்பிலும் தனித்துவமான அவதார்களை பயன்படுத்தும் சோதனைகளை செய்து வருகிறது.
அதுவும் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.