கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு தெரியுமா?
மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர். இந்து மத நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.

அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. மதுரா நகர சிறைச்சாலையில் தேவகி–வசுதேவர் தம்பதிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பொதுவாக அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வராது. ஆனால் இந்த ஆண்டு இரண்டும் ஒரே நாளில் அமைவது சிறப்பாகக் கருதப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பது வழக்கம்.
மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னென்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியன்று கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வீட்டை சுத்தம் செய்யவும்
கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக அலங்கரித்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால், வியாழக்கிழமையே வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்து விடுவது நல்லது. இந்த தினத்தில் வீட்டை சுத்தம் செய்வது கூடாது.
கிருஷ்ணரின் பாதங்களை வரையவும்
கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய வழக்கங்களில் ஒன்று, குட்டி கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவது போல் பாதங்களை வரைவதாகும். பச்சரிசி மாவை நீரில் கரைத்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதங்களை வரையலாம். இந்த தினத்தில் பூஜை அறையை அலங்கரிக்காமல் இருப்பது அசுபம்.

கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை அலங்கரிக்கவும்
வீட்டில் உள்ள கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கலாம்.கிருஷ்ணருக்கு பிடித்ததாகக் கருதப்படும் பால் பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபடலாம்.நேரம் இல்லையெனில், வெண்ணெய், அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.

எப்போது பூஜை செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாகக் கருதப்படுவதால், வடஇந்தியாவில் நள்ளிரவில் பூஜை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு விளக்கேற்றி, பிரசாதங்களைப் படைத்து கிருஷ்ணரை மனதார வழிபடுவது சகல செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |