திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி என்னவாகிறது? வியக்க வைக்கும் நடைமுறை!
What Happens to the Hair Donated at Tirupati Temple : இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது தலைமுடியை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
ஆனால், இந்த வழக்கம் ஏன் உருவானது? இதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது?என்பது குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பது கிமையாது. குறிப்பாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி பின்னர் எங்கு செல்கின்றது என்பது பலரும் அறியாத விடயம். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி காணிக்கையின் ஆன்மிகப் பின்னணி
திருப்பதியில் தலைமுடியை மழித்துக் காணிக்கையாகச் செலுத்துவது வெறும் சடங்கு மட்டுமல்ல. அது இறைவன் மீதான பக்தி, நன்றியுணர்வு மற்றும் சரணாகதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
பலர் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், குடும்ப நலம், குழந்தைப் பாக்கியம், உடல்நலம் போன்றவை கிடைக்க வேண்டியும் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
மனிதனின் அழகு மற்றும் பெருமையின் அடையாளமாகக் கருதப்படும் தலைமுடியை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் அகந்தையையும் பற்றுதலையும் துறப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

முடி காணிக்கைக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதை!
இந்த வழக்கத்துடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான புராணக் கதை உள்ளது. ஒருமுறை வெங்கடேஸ்வரப் பெருமானின் தலையில் காயம் ஏற்பட்டு, ஒரு பகுதியில் தலைமுடி உதிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட நீலாதேவி என்ற கந்தர்வ இளவரசி, தனது அழகிய கூந்தலின் ஒரு பகுதியை வெட்டி இறைவனுக்கு வழங்கியதாக ஐதீகம் கூறுகிறது. அவரது தியாகத்தால் மகிழ்ந்த பெருமாள், அதனை ஏற்றுக்கொண்டதாகவும், அதன்பிறகு பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தும் மரபு உருவானதாகவும் நம்பப்படுகிறது.

காணிக்கையாக வழங்கப்படும் தலைமுடி என்ன செய்யப்படுகிறது?
திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடி வீணாக்கப்படுவதில்லை. மாறாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), அவற்றைச் சேகரித்து, நீளம் மற்றும் தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி ஏலத்தில் விற்பனை செய்கிறது.
இந்தத் தலைமுடிகள் சர்வதேசச் சந்தையில் நல்ல மதிப்பைக் கொண்டுள்ளன. குறிப்பாக, விக் (Wig) மற்றும் முடி நீட்டிப்புகள் (Hair Extensions) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மூலம் கோயில் நிர்வாகத்திற்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.அந்த வருவாய் பல்வேறு கோயில் சேவைகள் மற்றும் சமூக நலப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதியில் முடி காணிக்கை செலுத்துவது ஒரு சாதாரண வழிபாட்டு முறையல்ல. அது இறைவன் மீதான நம்பிக்கை, வேண்டுதல் நிறைவேறியதற்கான நன்றி, அகந்தையைத் துறக்கும் மனப்பக்குவம் ஆகியவற்றின் வெளிப்பாடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |