உயிரை பறிக்கும் இதய நோய்கள்: இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சிப்படுத்தாதீர்!
இந்தியாவில் ஏற்படும் மொத்த மரணங்களில் சுமார் 27 முதல் 31 சதவீதம் வரை இதய நோய்களால் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 28 முதல் 31 லட்சம் பேர் இதயப் பிரச்சினைகளால் உயிரிழப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் ஏற்படும் மாரடைப்பு மரணங்களில் 5-ல் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்களுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன.

இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதய நோய்களில் பெரும்பாலானவற்றை ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி, புகைபிடிப்பதைத் தவிர்த்தல் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைத் தொடர்ந்து பரிசோதிப்பது இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிய உதவும். இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருள் “Don't Miss a Beat” என்பதாகும்.
அதாவது, இதயத்துடன் தொடர்புடைய எந்தவொரு சிறிய அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் வலியுறுத்தல்.

இதய நோய்கள் சில நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமலேயே உருவாகக்கூடும். எனவே, உடலில் தோன்றும் சில ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், அவற்றில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
அந்தவகையில், ஒருப்போதும் புறக்கணிக்கவே கூடாத இதய நோய்க்கான முக்கிய ஆரம்ப அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதயப் பிரச்சினையின் முக்கிய அறிகுறிகள்
நெஞ்சு வலி அல்லது அசௌகரியம்: நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம், இறுக்கம் அல்லது எரியும் உணர்வு ஏற்படலாம். இந்த வலி இடது கை, தாடை, கழுத்து அல்லது முதுகுப் பகுதிக்கும் பரவலாம்.
காரணமற்ற மூச்சுத் திணறல்: சாதாரணமாக நடக்கும்போதோ, படிக்கட்டுகளில் ஏறும்போதோ வழக்கத்திற்கு மாறாக மூச்சு வாங்கலாம்.

அதிக வியர்வை மற்றும் தலைச்சுற்றல்: வெயில் அல்லது அதிக உடல் உழைப்பு இல்லாதபோதும் திடீரென அதிகமாக வியர்த்தல், தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம்.
தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம்: போதுமான ஓய்வு எடுத்த பிறகும் கடுமையான சோர்வு நீடிப்பது கவனிக்க வேண்டிய அறிகுறியாகும்.
உடலில் வீக்கம்: கணுக்கால், பாதங்கள் அல்லது கால்களில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படலாம். இது இதயச் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: ஓய்வாக அமர்ந்திருக்கும்போதுகூட இதயம் வேகமாகவோ அல்லது படபடப்பாகவோ துடிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் முடிந்தவரை விரைவாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
குறிப்பாக நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் திடீரென ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் இது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |