ரோஸ் வாட்டரை சருமத்தில் பயன்படுத்துவது ஏன் தெரியுமா?
கோடை காலத்தில் சரும பிரச்சினைகளால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். கோடையில் நிலவும் வெப்ப தாக்கத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமமும் பாதிப்புக்குள்ளாகும். அதிலும், குறிப்பாக சிவத்தல், எரிச்சல், தடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சருமம் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த பிரச்சினைக்கு ‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் ரோஜா நீர் தீர்வு தரும். ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை பாதுகாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்றாலும் சருமத்தின் உள் அடுக்குகளை நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு அது போதுமானதல்ல.
ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். அது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கும். ரோஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது.
சரும எரிச்சல், தடிப்புகளை போக்கக்கூடியது. கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு ரோஸ் வாட்டர் நிவாரணம் தரும். காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம். வெண் படல அழற்சி, உலர்ந்த கண், கண்புரை போன்ற பிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும். சரும திசுக்களை மீண்டும் உருவாக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
இதையடுத்து, ரோஸ் வாட்டரின் வாசம் மனநிலையை மேம்படுத்த உதவும். நன்றாக தூங்கவும் உதவும். ஒப்பனையை நீக்கிய பிறகு ரோஸ் வாட்டரை உபயோகிக்கலாம். அது சருமத்தை குளிர்விக்க துணைபுரியும்.