பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு வேண்டுமா? ரெசிபி இதோ!
பொதுவாகவே வாரமுழுவதும் வேலைப்பளுவில் அலைந்து திரியும் பலருக்கும், ஞாயிற்றுக்கிழமை என்றாலே நிம்மதியாக சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்ற ஆசை தான் முதலில் தோன்றும்.
அதிலும் அசைவ உணவு பிரியர்களுக்கு, சிக்கன் அல்லது மட்டன் இல்லாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுமையடையாது என்றே சொல்லலாம்.

குடும்பத்துடன் சேர்ந்து சுவையான உணவை அனுபவிப்பதே அந்த நாளின் சிறப்பு. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக ஒரு அற்புதமான காரசாரமான சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 3
வெங்காயம்– 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1மேசைக்கரண்டி
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
சிக்கன் – 500 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு
துருவிய தேங்காய் – 1/2 கப்
மல்லித் தூள் – 1 மேசைக்கரண்டி
சிக்கன் மசாலா – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய்களை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். அதற்கு பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து, அதன் பச்சை வாசனை முழுவதும் மறையும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை சமைத்து வதக்கவும். அதன் பின்னர் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மஞ்சள் தூளும் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து வேகவிட வேண்டும்.
இதற்கிடையில், மற்றொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், மல்லித் தூள், சிக்கன் மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுத்து ஆறவிடவும்.

ஆறிய பிறகு அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த அரைத்த மசாலாவை வேகும் சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து, சுவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட வேண்டும். இறுதியாக அடுப்பை அணைத்தால், சுவையான, காரசாரமான சிக்கன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |