கம கமக்கும் மீன் குழம்பு… கிராமத்து ஸ்டைலில் சுவைத்து பாருங்கள்!
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சைவ உணவுகளில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவையும் அவசியம் சாப்பிட வேண்டும்.
அதுவும் அசைவ உணவில் கோழி, ஆடு இறைச்சியை விட நெத்திலி மற்றும் மத்தி மீன்களை எடுத்துக் கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிது
- புளி - 1
- எலுமிச்சை , உப்பு - தேவையான அளவு
- தேங்காய் - 1 கப் (துருவியது)
- சின்ன வெங்காயம் - 10
வறுத்து அரைப்பதற்கு...
- வரமிளகாய் - 8-10
- மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால் சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!