உடைத்த முட்டை குழம்பு... கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம்?
கிராமத்து ஸ்டைலில் உடைத்த முட்டை குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
பொதுவாக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்றுதான் முட்டை. முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது. மருத்துவர்கள் தினமும் இரண்டு முட்டையை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
அசைவ பிரியர்கள் முட்டையை சில வித்தியாசமாக வகைகளில் சமையல் செய்து சாப்பிடுகின்றனர். பொரியல், அவித்த முட்டை கிரேவி, அரை வேக்காடான முட்டை, முட்டை குழம்பு என பல வகைகளில் சாப்பிட்டிருப்போம்.
அந்த வகையில் முட்டை உடைத்து ஊற்றி வைக்கும் குழம்பினை தற்போது எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
முதலில் மிக்ஸி ஜார் ஒன்றில் துருவிய தேங்காய் சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்பு, தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி குழைவாக வதங்கிய பின்பு மிளகாய் தூள், மல்லி, கரம் மசாலா ஆகிய பொடிகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். குழம்பு நன்றாக கொதித்த பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். முட்டை வெந்த பின்பு இறுதியாக மல்லிஇலையினை தூவி இறக்கினால் சுவையான உடைத்த முட்டை குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |