கிராமத்து மண்வாசனையில் கத்தரிக்காய் குழம்பு! காரசாரமான ரெசிபி இதோ
நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம்.
கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும். இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும். அந்த வகையில் கிராமத்து சுவையில் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சேர்த்து உண்ண முடியும்.
தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய் – 5
- கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
- துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
- வேர்க்கடலை – ஒரு ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்
- வரமல்லி – 2 ஸ்பூன்
- வர மிளகாய் – 15 முதல் 15
- வெந்தயம் – அரை ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 5
- தேங்காய் – அரை கப்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – ஒரு ஸ்பூன்
- வெந்தயம் – அரை ஸ்பூன்
- பூண்டு – 10 பல்
- சின்ன வெங்காயம் – 10 முதல் 15
- தக்காளி – 2
- குழம்பு மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
- புளி – எலுமிச்சை பழஅளவு (சூடான தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை,
- மல்லித்தழை – சிறிதளவு
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, மிளகு, சீரகம், வர மிளகாய், வரமல்லி, வெள்ளை எள், தேங்காய் சேர்த்து வறுத்த வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் வறுத்த அனைத்தையும் ஆறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். கத்திரிக்காயை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்திருக்கும் இந்த மசாலாவில் சிறிதளவு எடுத்து கத்திரிக்காயின் உள்பக்கம் நன்றாகப் படுமாறு தடவி கலந்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சூடானவுடன் மசாலாவில் தோய்த்த கத்திரிக்காயை எண்ணெயில் பொறித்து எடுக்கவேண்டும்.
5 நிமிடங்கள் எண்ணெயில் பொரித்தெடுத்தால் போதும். இன்னமொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக மசிந்து வரும் வரை வதக்கவேண்டும். இதனுடன் தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதத்கிக்கொள்ளவேண்டும். அடுத்து புளி கரைசலை சேர்க்கவேண்டும்.
பின்னர் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அடுத்து எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை அதில் சேர்த்து, மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அதில் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்கவேணடும். இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |