அரசியல் பயணத்திற்கு விஜய் தயாரா...? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
அரசியல் பயணத்திற்கு விஜய் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
அரசியல் பயணத்திற்கு விஜய் தயாரா?
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் குறுஞ்செய்தியிலும், தொலைபேசியின் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளாராம். மேலும், அம்பேத்கர் பிறந்தநாளில் பல நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
வரும் 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற இருப்பதாகவும், இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது இது தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.