பசும்பொன் அய்யா குறித்து பேசினேனா? நடந்தது என்ன? நடிகர் விஜய் சேதுபதி பரபரப்பு விளக்கம்
கடந்த நாட்களுக்கு முன்பு பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்துசென்ற நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த ஒரு நபர் எகிறி எட்டி உதைத்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதனால், நடிகர் விஜய் சேதுபதி ஏன் தாக்கப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்தன. விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர், போலீசார் அளித்த விளக்கத்தில் அவருடன் வந்த நண்பர் தான் தாக்கப்பட்டார் என்று விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும், கைதான மகா காந்தி அளித்த விளக்கத்தில், அவருடன் விமானத்தில் பயணித்தப்போது தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறினேன், அதற்கு விஜய் சேதுபதியோ இது ஒரு தேசமா என கேட்டார்.
பின்னர், குருபூஜைக்கு வந்தீர்களா என்று தான் கேட்டதற்கு,விஜய் சேதுபதி யார் யார் குரு என்று கேட்டதாகவும் சொல்லி இருந்தார் மகா காந்தி.
இதன்பின்னர், செல்ஃபி எடுத்துக்கொள்ள கேட்டதற்கு விஜய் சேதுபதிவுடன் வந்தவர் மறுத்துவிட்டார். இதனால் வாய் வார்த்தை ஏற்பட்டது. பின், விமானநிலையத்தில் லக்கேஜ் எடுத்துக்கொண்டு வந்தபோது, விஜய் சேதுபதியின் பாதுகாவலரான பாஸ்டர் ஜான்சன் தான் தன்னை தாக்கினார்.
அதனால் தான் அவர்களை திருப்பி தாக்கினேன் என தெரிவித்துள்ளார். அவர்கள் என்னை தாக்கியதற்கான ஆதாரத்தை சிசிடிவி காட்சிகளை வாங்கி நிரூபிப்பேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், மகா காந்தியின் கருத்துக்கு விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம், பெங்களூரு விமான நிலையத்தில், நிலைதவறிய நிலையில் என்னை ஒருவர் அணுகினார். நான் அப்போது பிறகு பேசலாம் என தெரிவித்தேன்.
ஆனால் அதற்கு அவர் நீ என் ஜாதிதான் பேசுப்பா, நானும் நடிகன் தான் என்பது போல சத்தமிட்டார். மற்றபடி அவர் காணொளியில் பேசியது தவறு, தான் தேசியத்தையும், தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்து வந்த பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை.
நான் எப்படி ரசிகர்களிடம் நடந்துகொள்வேன் என்பதை நாடே அறியும்,. தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.