இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷ்... வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் மிளகாய் தொக்கு!
Venkatesh Bhat Shares a Special Chilli Thokku Recipe : சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ரத்தினம் என்பவரிடம் கற்றுக்கொண்ட பாரம்பரியமான மிளகாய் தொக்கு செய்முறையை பகிர்ந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக்கொண்ட இந்த ரெசிபி, இன்றளவும் அவருக்குப் பிடித்தமான மற்றும் ஸ்பெஷலான உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

காரசாரமான சுவையுடன், நாவிற்கு விருந்தளிக்கும் இந்த மிளகாய் தொக்கு, இட்லி, தோசை, தயிர் சாதம் மட்டுமின்றி பல்வேறு உணவு வகைகளுக்கும் பக்காவாக பொருந்தும். குறைந்த பொருட்களைக் கொண்டு, வீட்டில் எளிதாகத் தயாரிக்கக்கூடிய இந்தச் சுவையான தொக்கை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.
பல ஆண்டுகால சமையல் அனுபவத்தின் மூலம் கிடைத்த இந்த ஸ்பெஷல் ரெசிபியின் எளிய செய்முறை விளக்கத்தை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 150 கிராம்
கடலை எண்ணெய் – 3 ஸ்பூன்
விதை நீக்கிய குண்டு வத்தல் – 10
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
புளி – 25 கிராம்
வெல்லம் – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை
முதலில் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, கடலை எண்ணெயில் நன்கு வதக்கவும். பின்னர் விதை நீக்கிய குண்டு வத்தலைச் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பின்னர் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறிவிட வேண்டும்.

மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதையும் சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து உப்பு, புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
தொக்கின் நிறம் மாறி, எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கிளறிக்கொண்டிருக்கவும். இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் சுவையான, காரசாரமான மிளகாய் தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |