ஹோட்டல் ஸ்டைலில் அசத்தலான செட்டிநாடு முட்டைக் குழம்பு - பண்ணலாமா?
Healthy and Delicious Egg Curry recipe : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முட்டைக்கும் தனி இடம் உண்டு.
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை வழங்குவதுடன், கூந்தல் வளர்ச்சி, தசைகளின் வலிமை மற்றும் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளுக்கும் முட்டை உதவுகின்றது.

மேலும், இதில் புரதம், ரிபோஃப்ளேவின், ஃபோலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம் மற்றும் A, E, B6 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடல் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.
இத்தனை சத்துக்கள் நிறைந்த முட்டையை வைத்து, வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான முட்டைக் குழம்பை எளிதாக எப்படித் தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை – 3
பெரிய வெங்காயம் – 1
பட்டை – 1துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க:
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2
பூண்டு – 3 பற்கள்
கருப்பு மிளகு – ½ டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் முட்டைகளை நன்றாக வேகவைத்து, தோலை உரித்துக் கொள்ளவும். பிறகு முட்டையின் நான்கு பக்கங்களிலும் லேசாகக் கீறி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து, மிக்ஸி ஜாரில் தேங்காய், தக்காளி, பூண்டு, சோம்பு, கருப்பு மிளகு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் பட்டை, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, சிறிதளவு உப்பு தூவி நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்துக் நன்றாக கிளறிவிட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாகக் கொதித்து மசாலா வாசனை வந்ததும் வேகவைத்து வைத்துள்ள முட்டைகளைச் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
முட்டையில் மசாலா சுவை நன்றாக இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டால் அவ்வளவுதான், மணமான மசாலாவும், காரசாரமான சுவையும் நிறைந்த சுவையான ஹோட்டல் ஸ்டைல் செட்டி நாடு முட்டை குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |