காய்கறியே இல்லாமல் சுவையான குழம்பு தயார் செய்வது எப்படி? வெறும் 20 நிமிடம் போதும்
வெந்தயம் அல்லது மெதி என்று அறியப்படும் இந்த விதையில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. இவை ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆண்டிடியாபெடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.
மேலும், வெந்தயம் மலச்சிக்கலை நீக்குவதோடு, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள வெந்தயத்தில் சுவைமிகுந்த வெந்தயக் குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 ஸ்பூன்
வெந்தயம் – 1ஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 20 பல்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
சீராக தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளி – பெரிய எலுமிச்சை அளவு
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் வெந்தயம், கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும்.
- இவை நன்கு சிவந்து பொரிந்ததும், அவற்றோடு சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும். 1 நிமிடத்திற்கு பிறகு பூண்டு சேர்த்து இவை இரண்டையும் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- தொடர்ந்து இவற்றோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். நன்றாக மிக்ஸ் செய்த பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைய வதங்கிய பிறகு அவற்றோடு மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். (அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்).
- இப்போது முன்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும். அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி கொதிக்க விடவும்.
- பின்னர் மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி கீழே இறக்கவும். நீங்கள் எதிர்பார்த்த சுவையான வெந்தயக் குழம்பு தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்தோடு பரிமாறி ருசித்து மகிழவும்.