வித்தியாசமான வெஜ் மோமோஸ் செய்யலாம் வாங்க...
ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொருவிதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானோருக்கு காய்கறிகள் என்றால் அலர்ஜி.
அப்படியானவர்களுக்கு வித்தியாசமான முறையில் காய்கறிகளில் உணவுப்பொருட்கள் செய்து கொடுக்கலாமே... மோமோஸ் என்பது சீன நாட்டினரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.
அந்த மோமோஸை காய்கறிகளை வைத்து செய்து பார்க்கலாமே... இது வித்தியாசமாகவும் அதேசமயம் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - பாதி
வெங்காயம் - 1
மைதா மா - 1 கப்
குடைமிளகாய் - 1
பீன்ஸ் - 6
கேரட் - 2
வெ.பூண்டு - 3
இஞ்சி - 1 துண்டு
வினிகர் 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டைக்கோஸ், குடைமிளகாய், வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பீன்ஸ், வெ.பூண்டு, இஞ்சி என்பவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மா, இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் பிசைந்து மூடியிட்டு, ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி மற்றும் வெள்ளை பூண்டை சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
இஞ்சி, வெள்ளைபூண்டு வதங்கியதும் அதில் குடைமிளகாய், முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் என்பவற்றை போட்டு நன்கு கலந்துவிட்டு வதக்கவும்.
பின்னர் அதில் சோயா சோஸ், மிளகாய் தூள், உப்பு ஒரு மேசைக்கரண்டி சேர்த்து நன்கு கிளறிவிட்டு வேகவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்து அதில் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை ஒரு மேசைக்கரண்டி அளவு வைக்கவும்.
பின்னர் விருப்பமான வடிவில் மோமோஸை மடித்துக்கொண்டு, இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
மோமோஸ் வெந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்.