ஏறி கிடக்கும் உடல் எடையை குறைக்கும் வாழைத்தண்டு துவையல்.. காரசாரமாக செய்வது எப்படி?
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரசம், சம்பல் வகைகள், துவையல்கள், சட்னிகள் அனைத்தையும் வித்தியாசமாக செய்வார்கள்.
அதில் நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை இருப்பதுடன் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருக்கும்.
இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடக் கூடிய துவையல்களும் ஒரு வகையான சட்னி தொக்கு தான். இதனை வழக்கமாக பருப்பு, இலை, தண்டு, காய், அல்லது பழங்களை பயன்படுத்தி காரம், புளிப்பு சுவையுடன் செய்வார்கள்.
துவையல், சட்னியை விட சற்று கெட்டியாக இருக்கும். இதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
அந்த வகையில், வாழைத்தண்டு வீட்டில் இருந்தால் வாழைத்தண்டு துவையல் செய்யலாம். இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 சத்துக்கள் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும்.
அதே போன்று, மனிதர்களை வாட்டி வதைக்கும் சிறுநீரக கற்கள் கரையும் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வளவு பலன்களை கொட்டிக் கொடுக்கும் வாழைத்தண்டை வைத்து எப்படி துவையல் அரைக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு - 1 (தேவையிருந்தால் நறுக்கியது ஒரு கப் அளவு )
- சீரகம் - 1 தேக்கரண்டி
- புளி - சிறிய துண்டு
- பச்சை மிளகாய் - 2-3
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 1 கப் அளவு
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
துவையல் எப்படி செய்வது?
முதலில் துவையலுக்கு தேவையான வாழைத்தண்டை மேல் உள்ள தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர், நறுக்கிய வாழைத்தண்டுடன் சீரகம், புளி, பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கடாயில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்தவுடன் வாழைத்தண்டை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அதனுடன் புளி, பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும்.
அடுத்து அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனை அரைத்து வைத்திருக்கும் துவையல் மீது ஊற்றவும்.
வாழைத்தண்டு துவையலுடன் தாளிப்பை கலந்து சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
