சர்க்கரை நோயாளர்கள் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ புட்டு- இனி இப்படி செய்து பாருங்க
பொதுவாக தென்னிந்திய உணவுகள் உலகம் முழுவதும் பிரபலம்.
காலையில் எடுத்துக் கொள்ளப்படும் தோசை, இட்லி, இடியாப்பம், பிட்டு பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். காரசாரமான குழம்புடன் பரிமாறும் பொழுது வெளிநாட்டவர்கள் கூட ரசிகனாகி விடுவார்கள்.
இலங்கையில் பிரபலமாக இருக்கும் புட்டு- மீன் குழம்பு செய்தால் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் போட்டிப் போட்டு கொண்டு சாப்பிடுவார்கள். எவ்வளவு நாள் தான் அரிசி மாவில் பிட்டு செய்வது, ட்ரெண்டிங் மாறும் பொழுது சாப்பாட்டிலும் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டாமா?
ஆம், அப்படி நினைப்பவர்கள் இனி வீட்டில் அரிசி மா இல்லை என கவலை கொள்ளாதீர்கள். வாழைப்பூ இருந்தால் அதனை வைத்து சூப்பராக பிட்டு செய்யலாம்.
சுப நிகழ்ச்சிகளிலும், கேட்டரிங் செய்பவர்களும் செய்து சாப்பிடும் வாழைப்பூ பிட்டு எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வாழைப்பூ- 1
- கடலைப்பருப்பு- 1 கப்
- பூண்டு- 5 பல்
- கா.மிளகாய்- 8
- சோம்பு- 1 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்
- கடுகு- 1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
- வெங்காயம்- 1 (நறுக்கியது)
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு

புட்டு எப்படி செய்வது?
முதலில் புட்டு செய்ய தேவையான அளவு வாழைப்பூவை சுத்தமம் செய்து இதழ்களை மாத்திரம் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் தயிர், உப்பு, மஞ்சள் ஆகிய பொருட்களை போட்டு வாழைப்பூவை அதில் போட்டு வைக்கவும். கடலைபருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
2 மணிநேரத்திற்கு பின்னர் தண்ணீரை தனியாக எடுத்து விட்டு, அதனுடன் பூண்டு, கா.மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்து எடுத்த விழுது உடன் நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து கலந்து விட்டு, இட்லி அவிக்கும் பானையில் 10 நிமிடங்கள் நீராவில் வேக விடவும்.

10 நிமிடத்திற்கு பின்னர் கீழே இறக்கி, ஆறவிட்டு உதிர்த்து விடவும். அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, நன்றாக வதங்க விடவும்.
கடைசியாக அவித்து வைத்திருக்கும் வாழைப்பூவை சேர்த்து கிளறி இறக்கினால் யாரும் எதிர்பார்க்காத சுவையில் வாழைப்பூ புட்டு ரெடி!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |