அம்மா இறந்த செய்தி கேட்டும் 5 ஷாட்களை முடித்து கொடுத்த ராதிகா! நெகிழ்ச்சியில் படக்குழு
radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் அளித்துள்ள புரமோஷனல் பேட்டியில் நடிகை ராதிகாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
ராதிகாவின் நெகிழ்ச்சி செயல்
படத்தின் முக்கியமான காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. அப்போது காட்சியில் இன்னும் ஐந்து ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால், அதனை முடித்துவிட்டு செல்லலாமா என ராதிகா இயக்குநர் வெங்கியிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், தாயார் இறந்த செய்தி கிடைத்த நிலையிலும், காட்சியை முடித்துவிட்டு செல்ல ராதிகா விரும்பியதாகவும், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை மமிதா பைஜூவும் ராதிகாவின் மனநிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறியுள்ளார். தன் தாயைப் பற்றி ராதிகா படப்பிடிப்பின்போது பலமுறை பகிர்ந்துகொண்டதாகவும், அந்தச் செய்தி கிடைத்த பிறகும் அவர் முழு ஈடுபாட்டுடன் காமெடி காட்சியில் நடித்தது தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, தாயாருக்கும் தான் சார்ந்துள்ள கலைக்கும் ராதிகா அளிக்கும் சமமான மரியாதையே இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராதிகா கூறுகையில், அந்தக் காட்சியின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்ததாகவும், மீதமிருந்த ஐந்து ஷாட்களை முடிக்காமல் சென்றால் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்தே அதனை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதே உணர்வை மீண்டும் கொண்டு வந்து நடிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக, தன் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், “நீ கிளம்பி ஷூட்டிங் போ” என்று தன்னை அனுப்பி வைத்ததாக ராதிகா தெரிவித்துள்ளார்.
தாயை இழந்த துயரத்திலும், அவர் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகாவின் அர்ப்பணிப்பு தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |