சுடச் சுட வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?
சுவையான வாழைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைக்காய் – 3 எண்ணம் (பெரியது)
- கடலை மாவு – 250 கிராம்
- அரிசி மாவு – 3 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் பொடி – 5 ஸ்பூன்
- சீரகப் பொடி – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- சிவப்பு உணவுக் கலர் பொடி – 1 ஸ்பூன்
- சோடா உப்பு – 3/4 டீஸ்பூன்
- பெருங்காயப் பொடி – 3/4 ஸ்பூன்
- கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு

செய்முறை
வாழைக்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும்.
பின்னர் இழைப்பானில் நீளவாக்கில் ஒரே சீராக 1/4 இன்ச் தடிமனில் இழைக்கவும். எல்லா வாழைக்காயையும் இழைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி, சீரகப் பொடி, உப்பு, சிவப்பு உணவுக் கலர் பொடி, சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலந்து கொள்ளவும்.
பின் தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் இட்லி மாவுப் பதத்திற்கு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

மாவினை நீர்த்துப் போய் கரைத்தால், பஜ்ஜியில் மாவு ஒட்டாமல் வாழைக்காய் வெளியே தெரியும். ஆதலால் மாவின் பதம் மிகவும் முக்கியம். வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெயை ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காயின் சீவலை எடுத்து மாவில் முக்கி, முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போடவும்.
பஜ்ஜியின் ஒருபுறும் வெந்ததும் திருப்பி வேக விடவும். எண்ணெய் குமிழி தோன்றுவது அடங்கியதும், பஜ்ஜியை எடுத்து அரிகரண்டியில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.
பின்னர் பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.
வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.