கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு 3 மாதம் பின் தான் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி
கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கான நாட்கள் குழப்பமாக இருந்து வந்தது.
இது தொடர்பாக தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர் குழு மத்திய அரசுக்கு புதிய பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.
அதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்த தனிநபர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.
அதாவது 3 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதைப்போல நோய் எதிரணுக்கள் (மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்) அல்லது பிளாஸ்மா தானம் பெற்ற கொரோனா நோயாளிகளும் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.
மேலும், தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களும் குணமடைந்து 3 மாதங்களுக்கு பிறகே 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனாவை தவிர வேறு ஏதாவது தீவிரமான நோயால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோ அல்லது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தோ குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 முதல் 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால், பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் விவகாரம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.