உச்சம் தொடும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று: அமெரிக்க ஆராய்ச்சியாளர் அளித்த குட் நியூஸ்
ஓமிக்ரான் பரவல் உலகம் முழுக்க வேகமாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில்தான் ஓமிக்ரான் பரவல் குறித்து அமெரிக்காவின் டாப் அறிவியலாளரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான ஆண்டனி பவுச்சி நல்ல செய்தி ஒன்றை கூறி இருக்கிறார்.
ஓமிக்ரான் பரவல் காரணமாக எல்லா நாடுகளிலும் தினசரி கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 5 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோல் இந்தியாவில் தினசரி கேஸ்கள் 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஓமிக்ரான் கேஸ்கள் உயர்வது குறித்து அமெரிக்காவின் டாப் அறிவியலாளரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான ஆண்டனி பவுச்சி முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதில், ஓமிக்ரான் காரணமாக கொரோனா அலை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் வேகத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
திடீரென கொரோனா கேஸ்கள் அப்படியே நேர் கோடாக மேலே உயர்ந்து சென்றுள்ளது. கிராஃப் அப்படியே மேலே சென்றுள்ளது. நாம் மிகப்பெரிய அலைக்கு நடுவில் இருக்கிறோம். கேஸ்கள் மிக மோசமாக உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த வாரம் இன்னும் மோசமாக இருக்க போகிறது.
ஆனால் ஒரு விஷயத்தை பார்த்தீர்கள் என்றால் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கும். தென்னாப்பிரிக்காவில் இதேபோல்தான் ஓமிக்ரான் மிக வேகமாக பரவியது. அங்கு நவம்பரில் கிராப் மிக வேகமாக மேலே சென்றது. ஆனால் இப்போது அங்கு கேஸ்கள் சட்டென குறைந்துவிட்டன.
சட்டென கிராப் சரிந்துவிட்டது. இதுதான் மிகப்பெரிய நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. இதுதான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. இதனால் ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் வேகமாக பரவி, மிக வேகமாக உச்சம் தொட்டு, உடனே பரவல் முடியும் என்று நினைக்கிறேன்.
இந்த அலை நீண்ட நேரம் நீடிக்காது. வேகமாக இது உச்சம் தொடும் வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்காவில் கேஸ்கள் அதிகரித்தாலும் மருத்துவமனையில் சேரும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஓமிக்ரான் வலிமை குறைந்தது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மற்ற நாடுகளிலும் இது நடக்கலாம்.இதனால் லாக்டவுன் போடும்போது பொருளாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதுதான் முக்கியம். மொத்தமாக கட்டுப்பாடுகளை விதித்து அனைத்தையும் மூடுவது சரியாக இருக்காது என்று கூறினார்.