போதையில் மணமகளை நடனமாட வற்புறுத்திய மணமகன் - பின்பு அரங்கேறிய பரபரப்பு சம்பவம்!
உ.பி.யில் திருமணத்தின் போது மணமகன் குடித்துவிட்டு வந்து மணமகளை நடனாடி சொல்லியதால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில், சனிக்கிழமை இரவு திக்ரி என்ற இடத்தில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்தும் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மணமகனும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் குடிபோதையில் இருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, திருமண நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, குடிபோதையில் இருந்த மணமகன், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில், மணமகளை தன்னுடன் நடனமாடும்படி வற்புறுத்தியிருக்கிறார்.
இதற்கு மணமகள் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் குடிபோதையில் தள்ளாடியதைப் பார்த்த மணமகளும், அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயினர். இதனால் மனமுடைந்துபோன, மணமகள் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு மணமகள் குடும்பத்தாரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வரதட்சணைப் பொருட்களை மணமகளிடம் திரும்ப ஒப்படைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டதை அடுத்து, அதற்கு மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர்.
குடித்துவிட்டு வந்த மணமகனால், திருமணமே நின்றுபோனது அங்கு வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.