மொசு மொசு உளுந்து வடையின் சீக்ரட்... உடனே நீங்களும் செய்து ருசியுங்கள்!
உளுந்து வடை என்பது எல்லோரும் விரும்பு உண்ணும் அருமையான சிற்றுண்டி ஆகும்.
இன்று வீட்டிலேயே சுவையான மொசு மொசு உளுந்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்தம் பருப்பு – 250 கிராம்
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 6
- கறிவேப்பிலை – 3 கீற்று
- உப்பு – தேவையான அளவு
- மல்லி இலை – 3 கொத்து
- சமையல் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உளுந்து வடை செய்முறை
உளுந்தம் பருப்பினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அலசி கிரைண்டரில் இட்டு கெட்டியாகவும் மையாகவும் ஆட்டவும். மாவினை அரைக்கும் போது சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொண்டே அரைக்கவும். மாவில் சிறிதளவினை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கும்.
இதுவே மாவினை வெளியே எடுக்க தேவையான பதம் ஆகும். மாவினைத் தோண்டுவதற்கு முன்பு சிறிதளவு உப்பினைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி மாவினைத் தோண்டவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயினை காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை உருவி அலசி ஒன்றிரண்டாகக் கிள்ளிக் கொள்ளவும்.
மல்லி இலையை சுத்தம் செய்து அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும். ஆட்டிய உளுந்த மாவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து ஒருசேர கலக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி காய விடவும். சிறிதளவு மாவினை எடுத்து வாழை இலையில் வைத்து நடுவில் துளையிட்டு எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிடவும்.
எண்ணெய் குமிழி அடங்கியதும் வடையை எடுத்து விடவும்.