பிரியவே கூடாது என கைவிலங்குடன் சுற்றிய காதல் ஜோடி... வெறும் 123 நாட்களில் ஏற்பட்ட சோகம்
உக்ரேனில் பிரியவே கூடாது என்று தங்களது கைகளில் விலங்கிட்டு பிணைத்துக்கொண்ட காதல் ஜோடி 123 நாட்களுக்கு பின்பு பிரிந்துள்ள சம்பவம் பேச்சுபொருளாக இருந்து வருகின்றது.
உக்ரேனின் கார்கிவ் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் குட்லே (Alexandr Kudlay). கார் விற்பனையாளரான இவருக்கும், ஒப்பனைக் கலைஞரான விக்டோரியா புஸ்டோவிடாவாவுக்கும் (Viktoria Pustovitova) காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் எப்பொழுதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வினோத யோசனையை செயல்படுத்தியுள்ளனர். அதாவது காதலர் தினத்தன்று அலெக்ஸாண்டரின் வலது கை மற்றும் விக்டோரியாவின் இடது கை என இரண்டு கைகளையும் இணைத்து விலங்கு போட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வது, ஒருவர் ஷுலேஜ் கட்ட வேண்டுமென்றால் இன்னொருவர் உதவ வேண்டும், செல்போனை ஒருவர் பிடித்துக்கொள்ள மற்றொருவர் ஸ்க்ரோல் செய்ய வேண்டும் என்று 123 நாட்கள் ஈருடல் ஓருயிராக வாழ்ந்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது காதல் வாழ்வு கசந்து போனதால் விலங்கை உடைத்து பிணைப்பில் இருந்து விலகுவது என இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய விக்டோரியா, 24 மணி நேரமும் கூடவே இருந்ததால், அலெக்ஸாண்டரின் கவனம் தன் மீது இல்லை என்றும், அவர் மிஸ் யூ என்னும் வார்த்தையை தன்னிடம் சொல்லவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
அலெக்ஸாண்டரோ தாங்கள் ஒரே மாதிரியான விருப்பு, வெறுப்பு கொண்டவர்கள் இல்லை என்றும், தங்களுக்குள் ஒரே அலைவரிசை இல்லை என்றும் பிரிவுக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
தங்களைப் பிணைத்து வைத்திருந்த காதல் காணாமல் போன நிலையில், உடைக்கப்பட்ட கைவிலங்கை ஏலம் விடப் போவதாகவும், அதில் வரும் தொகையில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு தரவிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

