புடலங்காய் பொரியல் இவ்வளவு ருசியாக இருக்குமா? கல்யாண வீட்டு ரகசிய செய்முறை!
Kalyana Veetu Pudalangai Poriyal Recipe : பொதுவாக புடலங்காய் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சாப்பிட அவ்வளவாக ஆர்வம் இருக்காது. ஆனால், கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் புடலங்காய் பொரியலைச் சுவைத்துப் பார்த்தால், புடலங்காய் பிடிக்காதவர்கள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.
அந்த அளவுக்கு இந்தப் பொரியலின் சுவை தனித்துவமாக இருக்கும். தேங்காய் மணமும், மசாலாப் பொருட்களின் சுவையும் ஒன்றாகச் சேர்ந்து நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்தக் கல்யாண வீட்டு புடலங்காய் பொரியலைத் அதே சுவையில் மிகவும் எளிதாக வீ்ட்டிலேயே தயாரிக்கலாம்.

கல்யாண வீடுகளில் கிடைக்கும் அதே சுவையில் புடலங்காய் பொரியலை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையைப் பார்த்து இந்தப் பொரியலைச் செய்து பாருங்கள். இதன் எளிய பமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு
கடலைப் பருப்பு – ½ கப் (30 நிமிடம் ஊற வைத்தது)
புடலங்காய் – 300 கிராம்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
தண்ணீர் – ½ கப்
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 2 அல்லது 3
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை
துருவிய தேங்காய் – 1 மூடி
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி, சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புடலங்காயின் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் விதைகளைத் தேவைக்கேற்ப நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் குக்கரில் நறுக்கிய புடலங்காய், ஊற வைத்த கடலைப் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.

விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதனையடுத்து மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பார்த்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது வேக வைத்த புடலங்காய் மற்றும் கடலைப் பருப்பை அதில் உள்ள தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
தண்ணீர் ஓரளவு வற்றும் வரை மிதமான தீயில் வேக விட்டு, இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கினால் அவ்வளவுதான், அருமையான சுவையில் மணமான கல்யாண வீட்டு ஸ்டைல் புடலங்காய் பொரியல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |