நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு சுவையாக எப்படி செய்வது?
திருநெல்வேலியின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு, நீராவியில் வேக வைக்கப்படும் சத்தான உணவு இதை செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
கருப்பட்டி புட்டு
புட்டு என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய காலை உணவாகும். காலப்போக்கில் இது தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் அதிகமாக பிரபலமானது.
எளிமையான பொருட்களால் தயாரிக்கப்படும் புட்டு, சத்தும் சுவையும் நிறைந்த உணவாக இருப்பதால் அனைவராலும் விரும்பப்பட்டு உண்ணப்படுகின்றது.

திருநெல்வேலி பகுதியில் புட்டு தனித்துவமாக தயாரிக்கப்படுகிறது. இங்கு கருப்பட்டி மற்றும் தேங்காய் பூ கலந்து செய்யப்படும் புட்டு, இந்த பகுதியின் பாரம்பரிய சமையல் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இயற்கை இனிப்பான கருப்பட்டி பயன்படுத்தப்படுவதால், இந்த புட்டு ஆரோக்கியத்தையும் சுவையையும் ஒருங்கே வழங்குகிறது.

செய்யும் முறை
- இந்த புட்டு செய்ய சம்பா பச்சரிசி அல்லது வெள்ளை பச்சரிசி பயன்படுத்தப்படுகிறது. எனவே முதலில் அரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் வெள்ளை துணியில் பரப்பி காய வைக்க வேண்டும். காய்ந்த அரிசியை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து, சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- தண்ணீர் தெளித்து, மாவு உதிரி உதிரியாக இருக்கும் வரை நன்கு கிளற வேண்டும். மாவு ஈரமாகவோ, கட்டியாகவோ இல்லாமல் இருந்தால் தான் நல்ல பதத்தில் புட்டு கிடைகும்.

- இப்படி மாவை தயார் செய்து முடித்ததும் புட்டு வேக வைக்க பாத்திரத்தை தயார் செய்ய வேண்டும். இதற்கு புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
- நீராவி நன்றாக எழும்பும் போது, புட்டு குழலில் முதலில் இரண்டு கைப்பிடி அளவு மாவு போட வேண்டும். அதன் மேல் தேங்காய் துருவல் மற்றும் கருப்பட்டி துருவலை சேர்க்க வேண்டும்.
- இதே முறையில் மாவு, தேங்காய், கருப்பட்டி மாற்றி மாற்றி அடுக்கி குழலை நிரப்ப வேண்டும். பின்னர் குழலை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து சுமார் 8 நிமிடம் வேகவிட வேண்டும்.
- புட்டு வெந்து பின்னர் குழலிலிருந்து மெதுவாக வெளியே தள்ளி எடுத்தால், மணம்வீசும் கருப்பட்டி குழல் புட்டு தயாராகும். மேலே சிறிது நெய் ஊற்றி பரிமாறினால் சுவை மேலும் அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு ஒன்று
மாவு கிளறும் போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் தண்ணீர் சேர்த்தால், புட்டுக்கு கூடுதல் மணமும் இயற்கையான இனிப்பும் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |