இந்த கோவிலின் நுழைவுவாயில் மூடியே இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலில் அமைந்துள்ளது, விருத்தபுரீஸ்வரர் கோவில்.
விருத்தபுரீஸ்வரர் கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளது, குடைவரை காளி சன்னிதி.
இந்த சன்னிதியின் நுழைவுவாசல் மூடியே இருக்கிறது. இதற்கான வரலாற்றைப் பார்ப்போம்.
சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித்திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான்.
அதைக்கண்ட முனிவர், "உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்" என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான்.
அதற்கு முனிவர், "வஜ்ரவனம் என்ற திருப்புனவாயல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்" என்றார்.
தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான்.
அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு, அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.
தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், "உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது.
இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு" என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார்.
ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும்.
காளியின் உருவமான சூலத்தை நேரடியாக பக்தர்கள் தரிசிக்க கூடாதாம். இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.