கோடை வெயிலை சமாளிக்க இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க...
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இதனை சமாளிப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கூற்றுப்படி, 2001 முதல் 2020 வரை இந்தியாவில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை, முந்தைய இருபது ஆண்டுகளை விட 55 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
டெல்லியில் ஏப்ரல் 2025 இதுவரை இல்லாத வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும் இந்தியா உட்பட தெற்காசியா பகுதியில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக மனிதர்கள் உயிர்வாழும் வரம்பை நெருங்கி வருவதாக எச்சரிக்கப்படுகின்றது.
அதிக வெப்பம் புதிய இயல்பாக மாறி வருவதால், தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது உயிர் வாழ்வதற்கு முக்கியம். எனவே, கடுமையான வெப்ப அலையின் போது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
வெப்பத்தை சமாளிக்கும் உணவுகள்
தர்பூசணி மற்றும் முலாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. இது உடலை குளிர்ச்சியாக வைத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதிக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது உடல் வெப்பநிலையை குறைக்க உதவும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளரிக்காய் குளிர்ச்சியான தன்மைக்கு பெயர் பெற்றதாகும். இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. வெள்ளரிக்காயை சாலட் செய்து உப்பு, மிளகாய் பொடி சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் மற்றும் மோர் இவைகள் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகின்றது. புளித்த பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுததுவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.
இயற்கையான பானமாக இளநீரில், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், இயற்கை சர்க்கரையும் நிறைந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் குடிக்கும் பானத்தை விட இளநீர் சிறந்த பானமாக இருக்கின்றது.
புதினா உடம்பிற்கு குளிர்ச்சி தரும் நிலையில், புதினா கலந்த நீரை பருகலாம் அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம். சோம்பை இரவில் ஊறவைத்து சாலையில் தண்ணீரை குடித்தால் செரிமான மண்டலம் குளிர்ச்சியாக இருக்கும்.
சப்ஜா விதைகள் உடல் வெப்பத்தை குறைப்பதுடன், சரும ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.
கோடை காலத்தில் காபி, டீ, கோலா போன்ற பானங்களையும், காரமான மற்றும் வறுத்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். தண்ணீரில் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்கவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரோலைட் பானம் உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |