யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்! ஓர் வரலாற்று பதிவு
சங்கிலி குமாரன் அல்லது இரண்டாம் சங்கிலி அல்லது ஒன்பதாம் செகராசசேகரன் என்பவர் தான் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி அரசன் ஆவார்.
1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர்.
எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர்.
இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொன்று நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
சங்கிலி குமாரனை கைது செய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.
இதன்பின்னர் இவருடைய மூன்று பெண் பிள்ளைகளையும் கோவா கொண்டு சென்ற போர்த்துக்கேயர், கல்வி கற்றுக் கொடுத்துள்ளனர்.
மூத்த பெண் பிள்ளை போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக் கொண்டார், இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ (Soror Maria da Vistaco) ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய (King of Jaffna apataao (Ceylon)) மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது.
இந்நிலையில் 1974 ஆம் ஆண்டில் இரண்டாம் சங்கிலியனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார்.
1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இச்சிலை இடித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை 1996-ல் மீண்டும் சிமெந்தினால் செய்து அதே இடத்தில் வைத்தது.
2011 ஆம் ஆண்டில் இச்சிலை யாழ் மாநகரசபையால் உடைக்கப்பட்டு இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆகத்து 3 ஆம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.