இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே சாதாராண சமையலில் ஆரம்பித்து கல்யாண சமையல் வரையில், இந்திய உணவில் ரசம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
மிளகு ரசம், மருத்து ரசம், நண்டு ரசம், பச்சை புளி ரசம் என ரசத்தின் வகைகள் ஏராளம். ஆனால் இளநீரில் ரசம் தயாரிக்க முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் எண்ணில் அடங்கா மருத்துவ குணம் நிறைந்த இளநீரை கொண்டு எவ்வாறு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ரசம் தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - 1/2 எலுமிச்சை அளவு
தண்ணீர் - 100 மிலி
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
கடுகு - 1/4 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - 1/4 கைப்பிடியளவு
தக்காளி - 1 (கைகளால் நசுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 மேசைக்கரண்டி
இளநீர் - 1 லிட்டர்
பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து இடி உரலை எடுத்துக், அதில் சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மல்லி விதைகளை சேர்த்து இடித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரையில், வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளியை கைகளால் நன்றாக நசுக்கி பிசைந்து, பின் அதையும் சேர்த்து வதக்கி,மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, புளியை கைகளால் பிசைந்து அதில் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அதனையடுத்து அதில் இளநீரை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, நுரைக்கட்ட தொடங்கியதும், அடுப்பை அணைத்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் இளநீர் ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
