நாவூம் சுவையில் அன்னாசி ஊறுகாய்... இவ்வளவு ஈஸியா செய்யலாமா?
பொதுவாகவே பெரும்பாலனவர்கள் விரும்பும் ருசியான பழங்களின் பட்டியலில் அன்னாசி நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
இது அதன் தனித்துவமான சுவைக்கு மட்டுமல்லாது அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது.
அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு அன்னாசிபழம் பெரிதும் பயன்படுகிறது.
அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
மேலும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது.
இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது.
இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைப்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் அன்னாசிப்பழம் பெரும் பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த அன்னாசிப்பழத்தை தினசரி சாப்பிடுவது சாத்தியமற்றது. ஆனால் நாவூம் சுவையில் இப்படி ஊறுகாய் செய்து வைத்தால் தினசரி அதன் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கலாம்.
அன்னாசி ஊறுகாயை எப்படி மிகவும் எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாசி பழம் – 1 (நடுத்தர அளவுடையது)
சக்கரை – 500 கிராம்
வினிகர் – 1/2 கப்
இஞ்சி – 50 கிராம் (துருவியது)
பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)
பேரிச்சம்பழம் – 100 கிராம் (நீளமாக நறுக்கியது)
உப்பு, மிளகாய் தூள் – தேவையான அளவு
செய்முறை
முதலில் அன்னாசி பழத்தை ஒரு பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சக்கரை, வினிகர், இஞ்சி, பூண்டு, பேரிச்சை ஆகியவற்றை கலந்து சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் நன்றாக வேகவிட வேண்டும்.
அடி பிடிக்காமல் இருப்பதற்கு இடை இடையே கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
பாதியளவு வெந்ததும் தேவையான அளவுக்கு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
உப்பு மிளகாய் நன்கு அன்னாசியில் சேர்ந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் அன்னாசி ஊறுகாய் தயார். ஆறிய பின்னர் ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |