Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே ஞாயிற்று கிழமை என்றால், பெரும்பாலானவர்களுக்கு ஓய்வு தினமாக இருக்கும். குடும்பத்தில், எல்லோரும் வீட்டில் இருப்பார்கள்.
அதனால் இந்த நாளில், நன்றாக பிடித்ததை சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம்.
அப்படி வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில், அருமையான சுவையில், பட்டர் மட்டன் கிரேவி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
மட்டன் - 1/2 கிலோ
உப்பு - 1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 சிட்டிகை
மல்லித் தூள் - 1மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 தே.கரண்டி
தக்காளி - 1 (அரைத்தது)
சின்ன வெங்காயம் - 8 (அரைத்தது)
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
வெண்ணெய் - 1 தே.கரண்டி
சீரகம் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து அந்த மட்டனுடன், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த தக்காளி மற்றும் அரைத்த சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடங்கள் வரையில், ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயம் பொன்நிறமாகும் வரையில், அதனை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து சில நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
அதனையடுத்து மூடியைத் திறந்து, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, வரும் வரையில், வேகவிட்டு பின்னர் குறைவான தீயில் வைத்து 2 நிமிடங்களுக்க வேக வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்னர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் மணமணக்கும் சுவையான பட்டர் மட்டன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |