வீட்டில் அப்பளம் இருக்கா? அப்போ இந்த அசத்தல் குழம்பு செய்து பாருங்க
பொதுவாக வீட்டில் எல்லா நேரமும் காய்கறிகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி சில சமயம் காய்கறி இல்லை என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் அப்பள குழம்பை செய்யலாம்.
வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் மிகவும் எளிமையான முறையில் எவ்வாறு அப்பள குழம்பு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்-3 மேசைக்கரண்டி
அப்பளம் - 5 துண்டு
பூண்டு - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளி - 1 நெல்லிக்காய் அளவு
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், முழு அப்பளத்தை இரண்டு துண்டுகளாக உடைத்து பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து அதே எண்ணெய்யில் கடுகு சேர்த்து பெரிந்ததும், வெந்தயம், சீரகம் சேர்த்து பொரியவிட்டு, அடுத்ததாக, கறிவேப்பிலை,பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கி வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி,கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி கரைசலை சேர்க்க வேண்டும்.
பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில், மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வேகவிட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும் முன்னதாகவே பொரித்து வைத்த அப்பளங்களை சேர்த்து மூடி போட்டு 2 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில் அப்பள குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |