ஞாயிறு ஸ்பெஷல்: கேரளாவின் பாரம்பரிய சுவையில் பாலக்காடு சிக்கன் - பண்ணலாமா?
Authentic Kerala Style Palakkad Chicken recipe : ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து களைகட்டிவிடும். அதிலும், சிக்கன் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு முழுமையடையாது என்று நினைப்பவர்கள் ஏராளம்.
வாரம் முழுவதும் வேலை, பள்ளி எனப் பரபரப்பாக இயங்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ருசித்து மகிழ்வது ஒரு சிறிய கொண்டாட்டமாகவே அமைந்துவிடுகிறது. அப்படியிருக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கிச் சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?

வழக்கமாகச் செய்யும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் அல்லது சிக்கன் 65 என அதே உணவுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த முறை சற்று வித்தியாசமான சுவையில் குடும்பத்தினரை அசத்தலாம்.
அதுவும் அதிக சிரமமின்றி, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பாலக்காடு சிக்கன் வறுவலைத் தயாரிக்கலாம். அந்த ருசியான உணவை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்கத் தேவையானவை
சின்ன வெங்காயம் – 15
வர மிளகாய் – 5
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்

ஏனைய தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அவற்றை எடுத்து மிக்ஸி ஜாரில் போட வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும்.

மீதமுள்ள தேங்காய் எண்ணெயை வாணலியில் ஊற்றி, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
இப்போது ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியை மூடி வைத்து, சிக்கன் பாதியளவு வேகும் வரை சமைக்க வேண்டும்.
சிக்கன் பாதி வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, மீண்டும் மூடி வைத்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டால் அவ்வளவுதான் சுவையான, மணமணக்கும் பாலக்காடு சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |