பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று சொன்னால் மிகையாகாது.
குறிப்பாக கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து தயாரிக்கப்படும் குழம்புகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். அப்படி கிராமத்து பாணியில் ஊரே மணக்கும் மொச்சை பருப்பு கருவாட்டு குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு - 200 கிராம்
மொச்சைப்பருப்பு - 150 கிராம் (குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்தது)
கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)

வதக்கி அரைப்பதற்கு தேவையாவை
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 7-8 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
முருங்கைக்காய்
கத்திரிக்காய்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புளிச்சாறு
அரைத்த மசாலா
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
வேக வைத்த மொச்சை
நெத்திலி கருவாடு

செய்முறை
முதலில் நெத்திலி கருவாட்டை கொதிக்கும் நீரில் 2–3 நிமிடம் ஊறவைத்து, கை பொறுக்கும் அளவுக்கு ஆறியதும் எடுத்து, குளிர்ந்த நீரில் 3–4 முறை நன்றாக அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பின் சீரகம், மிளகு, நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தீயை குறைத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஆற விட வேண்டும்.
பின்னர் இந்தக் கலவையை ஒரு மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன்பின் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மூடி வைத்து 3–4 நிமிடம் வேக விட்டு, காஷ்மீரி மிளகாய்த்தூளை சேர்த்து கிளறி, புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அதன் பின் அதில் வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக சுத்தம் செய்த நெத்திலி கருவாட்டை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மொச்சப்பருப்பு கருவாட்டு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |