பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அசத்தல் ரெசிபி – செட்டிநாடு ஸ்டைல் சாம்பார்!
பாகற்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். அதனால் பலரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காய், குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சிறந்த உணவாகவும் அறியப்படுகின்றது.
குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்களை நீக்கவும் இது உதவியாக இருக்கும். பொதுவாக பெரும்பாலானவர்கள் பாகற்காயை பொரியலாக மட்டுமே செய்து சாப்பிட்டிப்பார்கள்.

ஆனால், அதன் கசப்பு சுவை அதிகம் தெரியாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு ஸ்டைலில் ஒரு சுவையான பாகற்காய் சாம்பாரை செய்து பாருங்கள்.
பாகற்காய் பிடிக்காதவர்களும் கூட இதை ஒரு முறை சுவைத்தால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.அப்படி அசத்தல் சுவையில், செட்டிநாடு பாணியில் பாகற்காய் சாப்பார் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய பாகற்காய் – 1 கப்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
வெல்லம் – 1 ஸ்பூன்
புளிக்கரைசல் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையானவை
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
மல்லி விதை – 2 ஸ்பூன்
வர மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை தனித்தனியாக நன்றாக மென்மையாகும் வரை வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரைக்கக் கொடுத்துள்ள கடலைப்பருப்பு, மல்லி விதை, வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும், சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைக்கவும். அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து கட்டிகள் இல்லாமல் கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பாகற்காய் துண்டுகளை சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வேகவைத்து, பின்னர் அதிகப்படியான நீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து நன்றாகக் கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் பச்சை வாசனை நீங்கியதும் வேகவைத்த பாகற்காயை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கலவை நன்கு கொதித்ததும் அரைத்த மசாலா விழுது, அரிசி மாவு கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறவும்.சாம்பார் தேவையான பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக, ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இந்தத் தாளிப்பை சாம்பாரில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான். அவுமையான சுவையில் பாகற்காய் சாம்பார் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |