நாவூரும் சுவையில் முள்ளங்கி சட்னி... இப்படி செய்தா கொஞ்சடும் மிஞ்சாது!
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னி வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றது. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துக்கும் பக்காவாக பொருந்துவது சட்னி தான்.
வழக்கமாகவே சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி,புதினா சட்னி, கார சட்னி என இதையே தான் மீண்டும் மீண்டு சாப்பிடுவோம்.

ஒரு முறை சற்று வித்தியாசமாக முறையில், வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில்,அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், முள்ளங்கி சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
முள்ளங்கி - 150 கிராம் (தோல் நீக்கி நறுக்கியது)
கருப்பு உளுந்து - 2 தே.கரண்டி
வரமிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப
புளி - சிறிய துண்டு
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

செய்முறை
முதலில் முள்ளங்கியை சுத்தம் செய்து, தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், முள்ளங்கியை சேர்த்து, நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கி, ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயுடன் மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், கருப்பு உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்து, அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரையில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
அவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, புளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முள்ளங்கி சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |