நாவூரும் சுவையில் ரசம் சாதம்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே நமது அன்றாட உணவுகளுடன் ரசம் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த அற்புத ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஜுரம், சளி, கபம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
ஏறாளமான மருத்துவ குணம் நிறைந்த ரசத்தை வைத்து எவ்வாறு மதிய உணவுக்கு எளிமையான முறையில் ஆரோக்கியம் நிறைந்த ரசம் சாதம் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 1/2 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 3/4 தே.கரண்டி
வரமிளகாய் - 2
தக்காளி - 2
பூண்டு - 7 பல்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
சாம்பார் தூள் - 1 தே.கரண்டி
தண்ணீர் - 6 கப்
வெல்லம் - 1 சிறிய துண்டு
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
நெய் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் அரிசி மற்றும் 1/4 கப் துவரம் பருப்பை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து 20 நிமிடங்கள் வரையில் சுத்தமான நீரில் ஊறவிட வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, 2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஊற வைத்து அதனை நன்றாக கரைத்து வடிகட்டி தணியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அதன் பின் அதில் புளி நீருடன் சேர்த்து 6 கப் நீரை ஊற்றி, ஒரு துண்டு வெல்லம், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் ஊற வைத்துள்ள அரிசி பருப்பை நீரை வடிகட்டிவிட்டு அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
இறுதியாக குக்கரை திறந்து அதில் நெய் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ரசம் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
