திருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பணமாகவும், தங்கமாகவும் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தேனியை சேர்ந்த பக்தர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
மேலும், தங்கதுரை தேனியை சேர்ந்தவர் மிகப்பெரிய பெருமாள் பக்தர். இவர் ஏழுமலையானுக்கு 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ சங்கு சக்கரம் வழங்கியது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறேன். நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஏழுமலையானை தரிசனம் செய்வது எனது வழக்கம்.
அப்படி, ஒவ்வொரு முறை தரிசனம் செய்த பிறகும் ஏழுமலையானுக்கு தேவையானவற்றை என்னால் முடிந்த வரை நன்கொடையாக வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன். மார்ச் 23ம் தேதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதால் ஊரடங்கில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.
அப்போது, முதல் வாரத்திற்கு ஒரு முறை சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன். கொரோனா காலகட்டத்தில் 30 நாட்கள் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்குவதாக வேண்டிக் கொண்டேன் வேண்டிக் கொண்ட சில நாட்களிலேயே எனது உடல் ஆரோக்கியம் அடைந்தது.
இதனையடுத்து, ஏழுமலையானுக்கு சங்கு சக்கரம் நன்கொடையாக வழங்குவதற்காக என்னால் முடிந்த காணிக்கையுடன் தயார் செய்து தற்பொழுது இந்த சங்கு சக்கரம் ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
என் உயிர், நான் வாழும் வாழ்க்கை அனைத்தும் பெருமாள் வழங்கிய போனஸ் வாழ்க்கையாக நான் கருதுகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திருமலைக்கு கொண்டுவரப்பட்ட சங்கு சக்கரம் ஏழுமலையான் கோவிலில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.