சொத்துக்காக அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம் - வலி தாங்க முடியாமல் முதியவர் போலீசில் புகார்!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமய்யா. முதியவரான இவரது மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதனையடுத்து, ராமய்யா தனது மகன்களுடன் தற்போது வசித்து வருகிறார். இவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை மகன் மற்றும் பேரன், மருமகள் ஆகியோர் வற்புறுத்தி வாங்கிக் கொண்டுள்ளனர்.
மேலும் இவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை எழுதிக்கொடுக்குமாறு குடும்பமாக சேர்ந்து முதியவர் ராமய்யாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர்.
குடும்பத்தினர் கொடுக்கும் கொடுமை தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்த முதியவர் ராமய்யா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் முதியவர், "தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் மகன், பேரன், மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
முதியவர் கொடுத்த புகாரை பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரை குடும்பமாகச் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
